படைகளை குறைப்பதாக ரஷியா கூறிய நிலையில் ஜெலன்ஸ்கி கருத்து
30 Mar,2022
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்- ரஷியா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது போரை உடனே நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரில் போர் பகுதியில் இருந்து ரஷிய ராணுவத்தின் சில பிரிவுகள் வெளியேறும் என்று ரஷியா தெரிவித்தது.
இதனால் தலைநகர் கீவ், செர்னிஹில் நகரில் ரஷியாவின் தாக்குதல்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இது போர் நிறுத்தத்துக்கான அறிவிப்பு அல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால் ரஷியாவின் இந்த உறுதிமொழியை உக்ரைன், அமெரிக்கா நம்ப மறுத்துள்ளன.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷியாவின் 34 நாட்கள் படையெடுப்பின்போது உக்ரைன் மக்கள் ஏற்கனவே நன்கு அவர்களது (ரஷியா) திட்டங்களை புரிந்து கொண்டுள்ளனர்.
உக்ரைன் மக்கள் அப்பாவிகள் அல்ல. சில பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பதாக ரஷியாவின் வாக்குறுதி உக்ரைன் படைகளை தவறாக வழிநடத்தும் நோக்கமாக இருக்கலாம் என்றார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, ‘‘ரஷியா பின் வாங்குவது அல்லது போரில் இருந்து விலகுவது என்பதை விட கீவ் நகரை சுற்றி உள்ள படைகளை சிறிய அளவில் நகர்த்தி கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’’ என்றது.
அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜான்கெர்பி கூறும்போது, ‘‘உக்ரைனின் பிற பகுதிகளில் ஒரு பெரிய தாக்குதலை காண நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ரஷியா படைகளை குறைப்பதாக கூறுவது கீவ்வுக்கு அச்சுறுத்தல் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல’’ என்றார்.
அதேபோல் ரஷியாவின் உறுதிமொழி தொடர்பாக மேற்கத்திய நாடுகளும் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளன.