உணவில் விஷம்ஸ தன் உயிரைக் காக்க 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புதின்?
25 Mar,2022
ரஷ்ய அதிபர் புதின் தன் உயிர் மீதான அச்சத்தால் தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலை பல்வேறு உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன.
உக்ரைன் தங்களுக்கு உதவுமாறு பல்வேறு நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உக்ரைனில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது `தி டெய்லி பீஸ்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் தன் உயிர் மீதான அச்சத்தால் தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக `தி டெய்லி பீஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் பிப்ரவரி மாதம் சுமார் 1,000 ஊழியர்களை, அவர்கள் தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் பணியிலிருந்து நீக்கியிருக்கிறார்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மெய்க்காவல்கள், சமையல்காரர்கள், சலவை செய்பவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் அடங்குவர்” என்று ரஷ்ய அரசாங்க ஆதாரத்தை மேற்கோள்காட்டி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பிரான்ஸின் வெளிப் பாதுகாப்புக்கான பொது இயக்குநரகத்தின் செயல்பாட்டாளர் `டெய்லி பீஸ்டிடம்’ கூறுகையில், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதலால் உலகின் பெரும்பகுதி ரஷ்யாவை கண்டித்துள்ள நிலையில், புதினைப் கொலை செய்ய முயல்வது என்பது ஒவ்வொரு புலனாய்வு அமைப்பின் அட்டவணையிலும் உள்ளது” என்று பேசியிருந்தார்.
முன்னதாக, அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்ய ராணுவத்தில் யாரேனும் ஒரு புரூட்டஸ் இருக்கிறார்களா அல்லது கர்னல் ஸ்டாஃபென்பெர்க் இருக்கிறார்களா?
ரஷ்யாவில் இருக்கும் புதினை அங்கிருந்து வெளியேற்றினால் மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்” எனப் பதிவிட்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.