ரஷியாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷிய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும். டாலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் கோபத்திற்கு ஆளாகியுள்ள அதன் மீது பொருளாதர தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த முறை பொருந்தும். ரஷியாவின் நட்பு நாடுகள் பழைய முறையிலேயே கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை மாற்றுவதற்கு சில நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். அதன்படி, ரஷியாவிடம் தோழமை அல்லாத நாடுகள் தாங்கள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷிய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே திரும்பச்செலுத்த வேண்டும். டாலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது.
எனினும், ரஷியா தனது ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எரிவாயு அளவை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வழங்கும்.
புதிய கட்டண முறையை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்துமாறு ரஷியாவின் மத்திய வங்கியை கேட்டுகொள்கிறேன்.
இது வெளிப்படையாகவும் ரஷியாவின் உள்நாட்டு சந்தையில் ரூபிள் வாங்குவதை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அதன்மீது உலக நாடுகள் விதித்த சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்து ரஷிய பணமான ரூபிளின் மதிப்பு, இப்போது யூரோ மற்றும் டாலருக்கு எதிராக வலுப்பெற்றது.
புதினின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், தனது சர்வதேச கூட்டாளிகள் விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான தொகையை இனி ரூபிளாக தான் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
"ரூபிளை வலுப்படுத்தும்" ரஷியாவின் முயற்சிகளை உக்ரைன் உடனடியாகக் கண்டனம் செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போருக்கு பதிலடியாக, மேற்கத்திய நாடுகள் வெளிநாடுகளில் உள்ள ரஷியாவின் சுமார் 300 பில்லியன் டாலர் வெளிநாட்டு நாணய இருப்புக்களை முடக்கியுள்ளன. இந்த நடவடிக்கையை ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் திருட்டு என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷிய அதிபர் புதினின் ஆலோசகரான அன்டோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்து, ரஷியாவிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
அனடோலி சுபைஸ், 1990-களில் ரஷியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். 1990-களில் ரஷியா தனியார்மயமாக்குதலை ஊக்குவித்த போது சுபைஸ் அதை பார்த்து செதுக்கி கட்டமைத்தார். புதினின் வளர்ச்சியை ஆதரித்தவர் சுபைஸ்.
கடந்த வாரம் தனது சகாவும் பொருளாதார நிபுணருமான யெகோர் கைடார் மறைவை ஒட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்ட சுபைஸ், என்னைவிட ரஷியா எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களை சரியாக கணித்தவர் என்று பதிவிட்டிருந்தார்.
ரஷிய தாக்குதல் தொடங்கியதிலிருந்தே தனது நடவடிக்கை மீதான உள்நாட்டு விமர்சனங்களை ரஷியா அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அண்மையில் மக்கள் முன்னிலையில் பேசிய ரஷிய அதிபர் புதின், ராணுவ நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என கூறினார்.
இந்நிலையில் தான் ரஷிய அதிபர் புதினின் ஆலோசகரான அனடோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் அர்காடி டிவோர்கோவிச் என்ற பொருளாதார மேதையும் ரஷியாவுக்கான ஆலோசனக் குழுவில் இருந்து விலகினார்.