ரஷியாவில் நுழைய ஜோ பைடனுக்கு தடை பதிலடியாக நடவடிக்கை
16 Mar,2022
உக்ரைன் மீது உக்கிர போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது. அதில் 11 ரஷிய ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையும் அடக்கம்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், பாதுகாப்பு மந்திரி எல்.ஆஸ்டின், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் எம்.மில்லே, பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும்,தூண்டும் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதேநேரம், அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா -
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. தற்போது, அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் எனவும், இதனால் 500 டன்னுக்கு மேல் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் பூமியில் விழும் எனவும் ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் திட்ட மேலாளர் ஜோயல் மொண்டல்பானோ பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்க - ரஷியா ஒத்துழைப்பின் அடிப்படையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் இன்று இருப்பதைப் போலவே தொடர திட்டமிட்டுள்ளோம். சர்வதேச விண்வெளி மையம் இயங்குவதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் தேவை” என கூறினார்.