ரஷ்யா மீது அடுக்கடுக்காக பொருளாதார, தொழில்நுட்ப தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வரும் நிலையில், இவற்றின் மூலம் உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று துருக்கி கருத்து தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது. கிழக்கு-மத்திய நகரமான டினிப்ரோ மற்றும் மேற்கு லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிரான்கிவ்ஸ்கில் உள்ள விமான நிலையங்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகின்றன.
செர்னிவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்கள் ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்டு, தொடர்ந்து ஏவுகணைகளை வீசுவதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்று 18-வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளை விதித்துள்ளன. யூ டியூப் நிறுவனம், ரஷ்ய அரசு சேனல்களுக்கு தடை விதித்துள்ளது.
இதேபோன்று ரஷ்யாவும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலை தளங்களுக்கு தடை விதித்திருக்கிறது. பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு உதவினால் சீனா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி, 'பொருளாதார தடைகளை ரஷ்யாவின் மீது விதிப்பதன் மூலம் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது' என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24-ம்தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் தீவிரத்துடன் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார, தொழில்நுட்ப தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. இதிலிருந்து மீள்வதற்கு சீனா உதவி செய்தால் அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை செய்துள்ளார்.
நாளை சீன தூதுவர் யங் ஜியேச்சியுடன் சல்லிவன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இத்தகைய எச்சரிக்கை சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு சீனா வழங்கி வரும், உதவிகளை அமெரிக்கா கண்காணித்து வருவதாக சல்லிவன் கூறியுள்ளார்.
சீனா மட்டும் அல்லாமல் உலகின் எந்த நாடும் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை எதிர்கொள்ள உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகம், போக்குவரத்து, பொருட்கள் விநியோக சங்கிலி உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. மேற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக அங்கு செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலையை சீரடைவதற்கு ஏற்ப தூதரகத்தை அங்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.