உக்ரைனில் கூலிப்படைகளை களமிறக்கும் புடின்!
12 Mar,2022
உக்ரைனில் வெளிநாட்டு கூலிப்படைகளை களமிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனில் போரிட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்குள் போரை முடித்துக்கொள்ள திட்டமிட்ட புடினின் கனவு துணிச்சல் மிகுந்த உக்ரேனிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே உக்ரைனுக்குள் கூலிப்படைகளை களமிறக்க விளாடிமிர் புடின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், குறித்த கூலிப்படையை தன்னார்வலர்கள் என்றே புடின் அடையாளப்படுத்தி வருகிறார்.
பெரும்பாலும் மத்தியக்கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களே அனுமதி கோரியுள்ளதாகவும், முதற்கட்டமாக 16,000 வீரர்களுக்கு அனுமதி அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சிரியாவில் பயிற்சி பெற்ற முன்னணி கூலிப்படையினரை ரஷ்யா களமிறக்க இருப்பதாக சர்வதேச பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது, ரஷ்ய தரப்பில் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதுடன், அவர்கள் பணத்திற்காக போரிடுபவர்கள் அல்ல, மாறாக தன்னார்வலர்கள் என்றே கூறி வருகிறது.