போர் எதிரொலி:ரஷியாவில் தனது 850 உணவகங்களை மூடும் மெக்டொனால்டு...!
09 Mar,2022
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 14வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதுவரை 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ஆப்பிள், லிவிஸ்,நெட்பிலிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது மெக்டொனால்டு இணைந்துள்ளது. இதன்படி ரஷியாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமான மூடுவதாக மெக்டொனால்டு அறிவித்துள்ளது. ரஷியாவில் உள்ள மெக்டொனால்டின் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில்,"உக்ரைனில் நடந்துவரும் தேவையற்ற மனித துன்பங்களை நாங்கள் புறக்கணிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளது.