உக்ரைன் போர்: ரஷிய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க பைடன் முடிவு
08 Mar,2022
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். ரஷியா போரை நிறுத்தும்படி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. அமைப்பும் வேண்டுகோள் விடுத்தது.
போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பெரிய அளவில் தடைகள் விதித்தன. எனினும், எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதிக்கு தடை எதுவும் விதிக்கவில்லை.
ரஷியாவுக்கு எதிராக, கடும் கட்டுப்பாடுகளை விதித்தபோதும் எரிபொருள் ஏற்றுமதியால் ரஷியா அதிக நிதியை பெறுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி பிற நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும்படி ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டார்.
உக்ரைன் மீது முன்னறிவிக்கப்படாத மற்றும் நியாயமில்லாத போரை தொடுத்த ரஷியா அதற்கு பொறுப்பேற்க செய்வதற்காக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலான அறிவிப்புகளை பைடன் வெளியிடுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அதிகளவில், ரஷியாவின் எரிபொருள் வினியோகங்களை சார்ந்தே உள்ளன. அவற்றில் 3ல் ஒரு பங்கு எரிவாயு ரஷியாவிடம் இருந்தே பெறப்படுகிறது. எனினும், ரஷியாவின் எரிவாயுவை அமெரிக்கா இறக்குமதி செய்யவில்லை.