மாஸ்கோ: உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும், என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.
கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாகப் போராடி வருகிறது.
எனவே, இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் மாளிகை
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையில் இருந்து நேற்றைய தினம் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது.அந்த அறிக்கையில், “உக்ரைனின் கார்கிவ் நகரில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்க ரஷ்யா 100க்கும் மேற்பட்ட பேருந்துகளுடன் எல்லையில் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உக்ரைன் ராணுவம், நாங்கள் அவர்களை மீட்பதை தடுக்கிறது.
பொருளாதாரத்தடைகள்
மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே மோதலை தூண்டிவிடப் பார்க்கிறார்.
அதுதான் அவரது எண்ணமும் கூட. அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் ரஷ்யாவை தனிமைப்படுத்த முடியாது. நாங்கள் அவற்றை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம்
முன்னதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம், “உக்ரைனில் இருக்கக்கூடிய 2,000 க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகளை நாங்கள் அழித்துவிட்டோம்.
அதில் 71 தகவல்தொடர்பு நிலையங்கள் மற்றும் 61 ரேடார் அமைப்புகளும் தகர்க்கப்பட்டுள்ளன” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெபிட் கிரடிட் கார்டுகள்
சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்கும் விசா, மாஸ்டர் கார்டுகள் ரஷ்யாவில் இனி தங்களின் வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.
இதன் காரணமாக, ரஷ்ய வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட மாஸ்டர், விசா கார்டுகள் செல்லாது. மேலும் ரஷ்ய வங்கிகள் வெளிநாட்டில் வழங்கிய மாஸ்டர் கார்டுகளையும் பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது ரஷ்ய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
விளாடிமிர் புடின்
இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமானப்பணிப் பெண்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, உக்ரைனில் நடக்கும் அனைத்து அவலத்திற்கும் அந்நாட்டின் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதை அந்நாட்டின் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்வதை இனியும் தொடர்ந்தால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழக்கூடும். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும்
திணிக்கப்படும் தடைகள்
உக்ரைன் அரசு ஆபத்தில் இருக்கிறது. தற்காலிக போர் நிறுத்த முயற்சியை நாசம் செய்து விட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்கின்றன.
திணிக்கப்படும் இந்த தடைகள், ஒருவகையில் போர் அறிவிப்பதற்கு சமமானவை. ஆனால், கடவுளுக்கு நன்றி, நாங்கள் இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை என்று புடின் கூறி உள்ளார்.