உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் உக்ரைனில் ஸ்டார் லிங்க் சேவை செயல்பட்டு வரும் நிலையில், அவை ரஷ்யாவின் இலக்காக மாறலாம் என ஆராய்ச்சியாளர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யா முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது. ரஷ்ய தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போர் மட்டுமல்லாது, ரஷ்யா இணைய வழியாகவும் ஹேக்கர்களை பயன்படுத்து உக்ரைனின் இணைய சேவையை முடக்கி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து உக்ரைனில் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு ஸ்டார் லிங்க் சேவையை வழங்கும் படி அந்நாட்டு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்டார் எலான் மஸ்க். கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று, உக்ரைனில் ஸ்டார் லிங்க் சேவை தொடங்கப்பட்டு, பல்வேறு முனையங்களில் வழியாக சேவை வழங்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள அரசு சார்ந்த கட்டிடங்களை ரஷ்ய ராணுவம் தாக்கி, அழித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் அடுத்த இலக்கு ஸ்டார் லிங்க் சேவையை அழிப்பதாக தான் இருக்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் “முக்கிய எச்சரிக்கை: உக்ரைனின் சில பகுதிகளில் இன்னும் ரஷ்யா அல்லாத தகவல் தொடர்பு அமைப்பாக ஸ்டார்லிங்க் மட்டுமே இயங்குகிறது, எனவே அதனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தேவைப்படும்போது மட்டுமே ஸ்டார்லிங்கை இயக்குவது நல்லது என்றும், குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும் படி ஆண்டனாவை வைக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். தாக்குதல் கருவிகளின் விஷுவல் இமேஜில் சிக்காத வண்ணம் ஆண்டனாக்களை பாதுகாக்க ஒளி உருமறைப்பை பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதல் உக்ரைனில் ஸ்டார் லிங்க் சேவை செயல்பட்டு வரும் நிலையில், அவை ரஷ்யாவின் இலக்காக மாறலாம் என ஆராய்ச்சியாளர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்காட்-ரயில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் "உக்ரைன் அலைக்கற்றைகளை புதினால் கட்டுப்படுத்த முடிந்தால், பயனர்களின் அப்லிங்க் டிரான்ஸ்மிஷன்கள் வான்வழித் தாக்குதல்களுக்கான அடையாளக் குறியாக மாறும்” என எச்சரித்திருந்தார்.
மேலும் ரஷ்யா நூற்றாண்டுகளாக நாடுகளின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை இலக்காக நிர்ணயித்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பல சம்பவங்களையும் 15க்கும் மேற்பட்ட ட்வீட்கள் மூலமாக விளக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க்கும் உக்ரைனை எச்சரித்து பதிவிட்டுள்ளது உலக நாடுகளை மேலும் கவலையடையச் செய்துள்ளது.