அப்படி நித்தம் குண்டுச் சத்தத்திற்கு இடையே ரஷ்யாவுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் போரில் இருந்து வெளியேறினாலும் இந்தப் போர் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து வெளியேற பல ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது.
இதனை அடுத்து பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதனை அடுத்து மிக மோசமான தாக்குதல் ஒன்றினை உக்ரைன் சந்தித்து வருகிறது.
பொருளாதார தடை
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக உலக தலைவர்கள் பலரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கண்டித்து வருகின்றனர்.
இதுகுறித்துப் பேசி இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,” இந்தப் போரினால் நிகழும் அனைத்து விளைவுகளுக்கும் ரஷ்யாவே முழு பொறுப்பு” என்றார்.
அதேபோல, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்றோரும் ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல ரஷ்ய கோடீஸ்வரான அலிசீர் உஸ்மானோவ் -க்கு சொந்தமான 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 4500 கோடி) மதிப்புமிக்க சொகுசுக் கப்பலை ஜெர்மனி கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் போர் குறித்த அறிவிப்பால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்அனைத்தும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடையை அறிவித்தன.
இதன் மூலம் தங்களது நாடுகளில் உள்ள ரஷ்ய வங்கிகளை முடக்கவும், ரஷ்ய பணக்காரர்களின் வளங்களை கைப்பற்றவும் உத்தரவிடப்பட்டன.
சொகுசு கப்பல்
உஸ்மானோவ்-க்கு சொந்தமான இந்த சொகுசு கப்பல் ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த வேளையில் ஜெர்மனி அரசால் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
512 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் உள்ள பணியாளர்கள் தொடர்ந்து கப்பலிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஐரோப்பிய யூனியன் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 25 ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளது.
இதில் உஸ்மானோவ்-ம் ஒருவர். இதுவரையில் ரஷ்ய பணக்காரர்களுக்கு சொந்தமான 5 சொகுசு கப்பல்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.