சரணடைந்த வீரருக்கு டீ, உணவு கொடுத்த உக்ரைனியர்கள் - கண்ணீர் விட்டு அழுத ரஷிய வீரர்
03 Mar,2022
உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சில ரஷிய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் நகர் அருகே ரஷிய பாதுகாப்பு படை வீரர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைனியர்களிடம் சரணடைந்தார். சரணடைந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ, உணவு கொடுத்தனர்.
மேலும், அங்கிருந்த ஒரு உக்ரைன் பெண் தனது செல்போனில் சரணடைந்த ரஷிய வீரரிடம் அவரின் தாயின் செல்போன் எண்ணை பெற்று அவருக்கு போன் செய்தார்.
அந்த வீரரின் தாயார் பேசத்தொடங்கியதும் போனை அந்த வீரரிடம் அந்த பெண் கொடுத்தார். தனது தாயாரிடம் பேசிய அந்த ரஷிய வீரர் கண்ணீர் விட்டு அழுதார். தங்களை தாக்க வந்த ரஷிய வீரருக்கு உணவு கொடுத்த உக்ரைன் மக்களின் செயல் பலரது பாராட்டை பெற்றஹ்டு. மேலும், இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.