உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5 ஆவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் கூட்டணியாக பணியாற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதிப்பு ஏற்படும் என ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான ரஸ்காஸ்மோசின் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் கூறியது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ரோகோஜின் கூறுகையில், ” விண்வெளியில் இருந்து ISS-ஐ கீழே விழ அனுமதிப்பதன் மூலம் அமெரிக்காவின் தடைகளுக்கு ரஷ்யா பதிலளிக்க முடியும்.
விண்வெளியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பான 420 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம், அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீதோ அல்லது இந்தியா மற்றும் சீனா மீதோ விழக்கூடும்” என எச்சரித்துள்ளார். அதன் சுற்றுப்பாதை பொதுவாக ரஷ்ய பெரும்பகுதிக்கு மேல் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி நிலையம்
விண்வெளியில் தற்போது செயல்பட்டு வரும் ஒரே ஆய்வகமாக சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இது நிலப்பரப்பிலிருந்து சுமார் 400 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இது 15க்கும் மேற்பட்ட கூட்டாணி நாடுகளால் இயக்கப்படுகிறது.
ரஷ்யா, அமெரிக்காவைத் தவிர கனடா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பல உறுப்பினர்கள் ISS இல் பங்குதாரர்களாக உள்ளனர்.
கால்பந்து மைதான அளவிலான ஐஎஸ்எஸ் மணிக்கு சுமார் 28,000 கிமீ வேகத்தில் பயணித்து, ஒன்றரை மணி நேரத்தில் பூமியைச் சுற்றி ஒரு பயணத்தை முடிக்கிறது. ஒரு நாளில், உலகம் முழுவதும் சுமார் 16 பயணங்களை மேற்கொள்கிறது.
1998 இல் செயல்படத் தொடங்கிய ஐஎஸ்எஸில் எப்போதும் 6 வீரர்களை பணியாற்றுவார்கள். தற்சமயம், அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பேர், ரஷ்யாவிலிருந்து இரண்டு பேர்,ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
நாசாவின் கூற்றுப்படி, இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 240 நபர்கள் ஐஎஸ்எஸ் -இல் பணியாற்றியுள்ளனர். இந்த நிலையமானது, பூஜ்ஜிய ஈர்ப்பு சோதனைகள், விண்வெளி ஆய்வு, தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
விண்வெளியில் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த முதல் நிலையம் ஐஎஸ்எஸ் கிடையாது. முன்பு, பல சிறிய ஸ்பேஸ் ஸ்டேஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில், 1980களில் இயக்கப்பட்ட ரஷ்யன் மிர் ஸ்பேஸ் ஸ்டேஷன் மற்றும் அமெரிக்கன் ஸ்கைலேப் நிலையங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சர்வதேச விண்வெளி நிலையம் 2028 வரை செயல்பாட்டில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரஷ்யா 2024க்குள் ஐஎஸ்எஸ் பணியிலிருந்து வெளியேறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்எஸ்-க்கு மாறான ஸ்பேஸ் ஸ்டேஷனை ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். இந்தியா, சீனா உள்பட பல நாடுகள்,தங்களது சொந்த விண்வெளி நிறுவனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளனர்.சீனா ஏற்கனவே குறைந்தது இரண்டு முன்மாதிரிகளை சோதித்துள்ளது.
மிரட்டல்
ரஷ்யா ISS இன் உந்துவிசை அமைப்பை வழங்குவதால், அதை முன் வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வைத்திருக்கிறது. ISS இரண்டு பரந்த பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் முறையாக அமெரிக்கா, ரஷ்யாவால் நிர்வகிக்கப்படுகிறது. அமெரிக்கா விண்கலத்தை இயக்கும் பவர் மற்றும் சிஸ்டம் அமைப்பை நிர்வகிக்கிறது. ரஷ்யா, அதனை சுற்றுப்பாதையில் வைத்திருப்பதை உறுதி செய்கிறது.
ISS முற்றிலுமாக பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இல்லை. இது சிறிது ஈர்ப்பு விசையை சந்திக்கிறது. அதேபோல், பூமியைச் சுற்றி வரும்போது சிறிது ஆற்றலை இழக்கிறது. அப்போது, ஐஎஸ்எஸ் கீழே விழும் ஆபத்து ஏற்படுகிறது. அதனை தடுத்திட, ரஷ்யர்கள் அவ்வப்போது ISS உடன் தங்களை இணைத்துக் கொள்ளும் உந்துதல்களை அனுப்புகிறார்கள். இது, ஐஎஸ்எஸ் தொடர்ந்து சுற்றுப்பாதையில் பயணிப்பதற்கான வேகத்தை அளிக்கிறது.
ஒருவேளை, ரஷ்யா தனது ஆதரவைத் திரும்பப் பெற்றால், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் ISS கீழே விழுவதை தடுக்க முடியாது என்பதை டிமிட்ரி ரோகோஜின் எச்சரிக்கை மறைமுகமாக கூறுகிறது.
ஆனால், அவரது பேச்சுக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகள் இரண்டையும் ISS க்கு ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய தனியார் விண்வெளி நிறுவனமான SpaceX நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அவர், ரஷ்யர்கள் உந்துதல்களை அனுப்ப மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், எங்கள் நிறுவனம் அந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அமெரிக்கா-ரஷ்யா ஒத்துழைப்பு
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மிகப்பெரிய விண்வெளி ஒத்துழைப்பு திட்டமாக ஐஎஸ்எஸ் உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் புவிசார் அரசியல் தொடர்பான பதற்றமான சூழ்நிலையிலும், ISS கூட்டாண்மையில் பாதிப்பு ஏற்படவில்லை.
எடுத்துக்காட்டாக, 2014 இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்தபோது, உக்ரைனில் சிக்கல் ஏற்பட்டது. அது ISS ஒத்துழைப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ரோகோசினின் அச்சுறுத்தல் அறிவிப்பை, ரஷ்யா செய்ய நினைத்ததாக கருதப்படவில்லை. நாசாவும் அதை நிராகரித்துள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் போக்கு விண்வெளி ஒத்துழைப்பை வேறு வழிகளில் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஏற்கனவே, இரு நாடுகளும் இணைந்து திட்டமிட்ட வீனஸ் பயணத்திலிருந்து அமெரிக்காவை விலக்கி வைக்க ரஷ்யா முடிவு செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2029இல் வீனஸூக்கு செல்லும் Venera-D மிஷின் இதுவரை அமெரிக்கா-ரஷ்யா கூட்டுப் திட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.