ரஷியா மீது ஐரோப்பிய யூனியன், நேட்டோ, ஜி7 நாடுகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைவிதிப்பு
25 Feb,2022
உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக ரஷியா மறுப்பு தெரிவித்து வந்தது. ஆனால், உக்ரைன் நேட்டோ அமைப்பின் உறுப்பினராக தீவிரம் காட்டியதால், ரஷியா கோபம் அடைந்தது. இதனால் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்தார்.
இதனால் போர் நிகழும் அபாயம் ஏற்பட்டது. ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் சமாதானம் பேச முயற்சி செய்தனர்.
அமெரிக்கா போர் தொடுக்கமாட்டோம் என ரஷியா உறுதி அளித்தால் பேச்சுக்கு தயார் என்றது. ரஷியா நேட்டோ உறுப்பினராக உக்ரைனை சேர்க்க மாட்டோம் என்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என பதிலடி கொடுத்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
நேற்று இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்குள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள புதினுக்கு ரஷியா நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இதனால் இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுக்க புதின் உத்தரவிட, விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன. இன்று போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன், நேட்டோ, ஜி7 நாடுகள் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தடை விதிக்கும் என ஜெர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.