உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம்..! - ஜோ பைடன் எச்சரிக்கை
16 Feb,2022
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால் ரஷியா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. எனவே உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என 12-க்கும் அதிகமான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
இதனிடையே உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், அதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் கூறுகையில், “உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம், இது இன்னும் சாத்தியமாகும். உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், நாங்கள் ரஷ்யாவுடன் நேரடி மோதலை நாடவில்லை என்றாலும், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.