போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு அமெரிக்கா- கனடா எல்லை பாலம் மீண்டும் திறக்கப்பட்டது
15 Feb,2022
கனடாவில் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் கடந்த மாத இறுதியில் போராட்டத்தில் குதித்தனர். 2 வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா-கனடா எல்லையை இணைக்கும் மிகப்பெரிய பாலமான தூதர் பாலத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து முடங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் இந்த பாலம் வழியாக நடந்து வரும் நிலையில், போக்குவரத்து முடக்கப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் லாரி டிரைவர்களின் முற்றுகை போராட்டத்துக்கு எதிராக கனடா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தூதர் பாலத்தில் முற்றுகை போராட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறியும் லாரி டிரைவர்கள் தொடர்ந்து தூதர் பாலத்தை முற்றுகையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தூதர் பாலத்தில் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியடித்தனர். கலைந்து செல்ல மறுத்த டஜன் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து தூதர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடங்கியுள்ளது.