ரஷ்யா பதற்றம்.எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை குவித்திருப்பதாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
10 Feb,2022
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.
ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை.
போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், 'உக்ரைன் எல்லையில் ரஷ்யா செய்யும் வேலைகளை நாங்கள் கவனித்து வருகிறோம். கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்துள்ளது. மொத்தம் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக எங்களால் சொல்ல முடியாது.
ஆனால் உக்ரைன் எல்லை மட்டும் குறைந்தது 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். ஒவ்வொரு நாளும் ரஷ்யா தனது வீரர்களை அதிகப்படுத்தி வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் எந்த பிரச்னைக்கும் முடிவு காணலாம். ரஷ்யா தனது படைகள் குவிக்கும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். தூதரக ரீதியில் இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷ்யா பிரச்னையை தீர்க்க பிரான்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.