சீனாவில் வேலைவாய்ப்பை உருவாக்கி இந்தியாவில் பொருட்களை விற்கும் டெஸ்லா'
09 Feb,2022
புதுடில்லி: சீன தொழிலாளிகளுக்கு வேலை வழங்கி இந்தியாவில் பொருட்களை விற்பதில் மட்டும் முனைப்பாக டெஸ்லா நிறுவனம் உள்ளதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
பிரபல அமெரிக்க எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி வருகிறது. உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய ஆட்டோ மொபைல் சந்தையை கைபற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போத பெட்ரோல் விலை உயர்வால் மின்சார வாகனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதன் காரணமாக எலான் மஸ்க் டெஸ்லா இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகிறார்.
கடந்த ஆண்டு டெஸ்லா இறக்குமதி வரியை ரத்துசெய்ய இந்நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்தியாவில் தொழிற்கூடங்கள் அமைத்து மோட்டார் வாகனங்களை இங்கேயே தயாரித்து வாகனங்களை விற்றால்தான் இந்த வரியை ரத்து செய்ய முடியும் என்று மத்திய அரசு கண்டிப்பாக தெரிவித்தது. இவ்வாறு செய்வதன் மூலமாக இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பல ஆட்டோமொபைல் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிற நோக்கில் மத்திய அரசு டெஸ்லாவிடம் இந்த நிபந்தனையை வைத்தது.
இந்நிலையில் இந்தியாவில் தங்கள் பொருட்களை அதிகமாக விற்று லாபம் ஈட்ட நினைக்கும் டெஸ்லா வேலைவாய்ப்பினை சீனாவில் உருவாக்கி வருவதாக சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் யூனியன் அமைச்சர் கிருஷ்ணா பால் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சீனாவில் குறைந்த சம்பளத்துக்கு அதிக தொழிலாளர்கள் கிடைப்பதால் உதிரிபாகங்களை ஒன்று சேர்க்கும் பணிக்கு சீன தொழிலாளர்களை டெஸ்லா நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதாக நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்த கிருஷ்ணா, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பை பெருக்காமல் வர்த்தகத்தை மட்டும் அதிகரிக்கும் எண்ணத்தில் உள்ளது என குற்றம் சாட்டினார். எனவே இம்முறை இறக்குமதி வரியை இந்த நிறுவனத்துக்கு ரத்து செய்ய முடியாது என்று அவர் கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.