அமெரிக்க ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவம் பயிற்சி
07 Feb,2022
யவோரிவ்;ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைனை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், 'நேட்டோ' அணியில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, உக்ரைனுக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்படும் என, அமெரிக்கா அறிவித்தது.
அதன்படி, உக்ரைனுக்கு அமெரிக்கா விமானங்களில் ஆயுதங்களை அனுப்பியுள்ளது. உக்ரைன் ராணுவத்தினர் ரஷ்ய எல்லையோரம் உள்ள யவோரிவ் நகரில் அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர் தளவாடங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பனி படர்ந்த மலைப் பகுதியில், வெண்மையும் பழுப்பும் கலந்த உடையணிந்து ராணுவத்தினர் பயிற்சி பெறுகின்றனர்.
இது குறித்து உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரி பெஸ்டியுக் கூறும்போது, ''அமெரிக்க ஆயுதங்கள், ரஷ்ய ராணுவ வாகனங்களை சேதப்படுத்தவும், எதிரிகள் மறைந்துள்ள கட்டடங்களை தகர்க்கவும் உதவும்,'' என்றார்.அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி மட்டுமின்றி, ஓரிரு தினங்களில் ஜெர்மனி, போலந்து நாடுகளில் உள்ள தன் ராணுவ தளத்தில் இருந்து, 3,000 வீரர்களை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.