உக்ரைனுக்கு ஆதரவாக வீரர்களை அனுப்ப பிரிட்டன் பிரதமர் முடிவு
31 Jan,2022
லண்டன்-உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டு களாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. 2014ல் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் வலுத்தது. எதிர்பார்ப்பு'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது;
இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இதற்கிடையே உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அதன் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன.
இந்நிலையில் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள், போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ஐரோப்பாவுக்கு அனுப்பிவைக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். நேட்டோ படைபிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.வரும் நாட்களில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் மற்றும் ராணுவ அமைச்சர் பென் வாலஸ் ஆகியோர் ரஷ்யாவுக்கு சென்று, அந்நாட்டு அமைச்சர்களுடன் பேச்சு நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறுகையில், ''எங்கள் அமைப்பில் உக்ரைன் இன்னும் இணைய வில்லை. இதனால் நேட்டோ படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக இப்போது அனுப்பி வைக்கும் திட்டம் இல்லை,'' என்றார். இதற்கிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய தீவு நாடான அயர்லாந்துக்கு அருகே நடத்திய போர் பயிற்சிகளை வேறு இடத்திற்கு ரஷ்யா மாற்றி உள்ளது.