8500 வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா
27 Jan,2022
உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் என்பதால் உக்ரைனுக்கு ஆதரவாக, தன் 8,500 வீரர்களை தயாராக இருக்கும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னைஉள்ளது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராவதற்கும், 'நேட்டோ' எனப்படும்,வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணையவும் உக்ரைன் விரும்புகிறது.இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்தாலும், அதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது.உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.உக்ரைனுக்கு ஆதரவாக போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ஐரோப்பிய நாடுகள் அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், நேட்டோவின் அதிரடிப் படையின் ஒரு அங்கமாக, தன் 8,500 வீரர்களை தயாராக இருக்கும்படி அமெரிக்க ராணுவ அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசித்ததாகவும், அதன் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.