தென் சீனக்கடல் பகுதியில் தொடரும் பதற்றம்; நீடிக்கும் அமெரிக்க-சீன மோதல்
25 Jan,2022
வாஷிங்டன்: தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் தொடர்கிறது. அமெரிக்க-சீன மோதல் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது.
சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் அமெரிக்காவும் சீனாவும் அவ்வப்போது தங்களது போர் விமானம் தாங்கும் கப்பல்களின் வாயிலாக மோதல் போக்கில் ஈடுபடும். இதேபோல சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
உலகின் சர்ச்சைக்குரிய கடற்பரப்புகளில் முக்கியமானது தென் சீனக் கடல் பரப்பு. இந்த தென் சீனக் கடல் பரப்பை தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிடம் இருந்து கடல் எல்லையை ஆக்கிரமித்து முழுவதுமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
மேலும் இப்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி இராணுவ மற்றும் கடற்படை பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா, சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி தருவதற்காக அவ்வப்போது தென் கொரிய மற்றும் அமெரிக்க போர் விமானம் தாங்கி கப்பல்கள் இந்த கடற்பரப்பில் செலுத்தி பயிற்சி மேற்கொள்வது வாடிக்கை.
தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடற்படை மேற்கொள்ளும் இந்த கூட்டுப் பயிற்சி சீனாவை மறைமுகமாக அச்சுறுத்தி வருகிறது. அடிக்கடி தென் சீன கடல் பகுதியில் நுழையும் அமெரிக்க கப்பல் சமீபத்திலும் நுழைந்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதியை தற்போது தைவான், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு முக்கிய காரணம் சரக்கு கப்பல்கள் இந்த கடற்பரப்பு வழியாக செல்வது மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்றார்போல இப்பகுதி அதிக மீன்கள் கொண்ட பரப்பாக விளங்குவது ஆகும். சமீபத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் இந்த கடற்பகுதியில் சென்றதற்கு காரணம் கூறிய அமெரிக்க ராணுவ கமாண்டர், பிற நாடுகள் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்காகவே தென் சீன கடற்பகுதியில் அமெரிக்க கப்பல் செல்ல உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இந்த நாடுகளின் இச்செயல்கள் சீன கம்யூனிச அரசை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.