நாட்டின் அதிபரையே கைது செய்து சிறைவைத்த ராணுவ வீரர்கள்
24 Jan,2022
புர்கினா பாசோ நாட்டின் அதிபரை ராணுவ வீரர்கள் கைது செய்து ராணுவ முகாமில் சிறை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய தேசமாகும், பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்நாடு 1960ல் சுதந்திரம் பெற்றது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் (60%), கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் சிறுபான்மையினராகவும் வசித்து வருகின்றனர்.
இந்நாடு ஸ்திரத்தன்மையற்றதாக பார்க்கப்படுகிறது. பல முறை புரட்சிகள் ஏற்பட்டு அரசுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. Republic of Upper Volta (1958–1984) என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தாமஸ் சங்கரா என்ற அதிபர் புர்கினா பாசோ என பெயர் மாற்றினார். புர்கினா பாசோ என்றால் நேர்மையான மனிதர்களின் நிலம் என பொருள். சுற்றுலாத்துறையை பெருமளவு நம்பியிருந்த இந்த நாடு தற்போது மீண்டும் ஒரு ராணுவ புரட்சியை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அண்டை நாடான மாலியில் இருந்து இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் புர்கினா பாசோவில் ஊடுருவி வருகிறார்கள். இருப்பினும் ஆட்சியாளர்கள் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கையை எடுக்க தவறியதால், ராணுவத்தினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில ராணுவ உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என ராணுவ வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த நவம்பரில் பயங்கரவாதிகளால் 53 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து கடந்த வாரம் அரசுக்கு எதிராக சதி செய்ததாக 11 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இது ராணுவத்தினரின் ஒரு பிரிவினரை கோவத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்று தலைநகர் Ouagadougouவில் உள்ள அதிபர் மாளிகை அருகே கடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து அந்நாட்டின் அதிபர் ரோச் காபோர் ராணுவ வீரர்கள் சிலரால் கைது செய்யப்பட்டு ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிபர் பயன்படுத்திய ராணுவ வாகனங்கள் குண்டு மழை பொழியப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சாலைகளில் நிற்பதாகவும், இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் பிபிசி தகவல்கள் கூறுகின்றன. மேலும் அதிபரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. சாலைகளில் குவிந்து அதிபருக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.