சோவியத் குடியரசு போல சீனா சிதறும் ஆபத்து; சீன வெளியுறவு துறை எச்சரிக்கை
24 Jan,2022
பீஜிங் : ''தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தால் சோவியத் குடியரசு போல சீனாவும் சிதறும்'' என சீன வெளியுறவு கொள்கை ஆலோசகரான ஜியா குய்ங்குவா எச்சரித்துள்ளார்.
சீனாவின் சி.பி.பி.சி.சி. எனப்படும் அரசியல் ஆலோசனை உயர் மட்டக் கமிட்டி தலைவரான ஜியா குய்ங்குவா சர்வதேச பாதுகாப்பு ஆய்வு இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: சோவியத் குடியரசு தேச பாதுகாப்புக்காக அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தது. அதனால் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்க நேர்ந்தது.
மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை. அதனால் சோவியத் அரசு மக்களின் செல்வாக்கை இழந்து தனித் தனி நாடுகளாக 1991ல் சிதறியது. கம்யூனிஸ்ட் நாடான சோவியத் குடியரசின் வீழ்ச்சி சீன பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது.இதே நடைமுறையை தற்போது சீனா பின்பற்றி வருகிறது. தேசப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கண்ணை மூடிக் கொண்டு ராணுவ பலத்தை அதிகரித்து வருவதால் செலவினங்கள் உயர்ந்து வருகின்றன.
இது விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களுக்கு தடைகல்லாக அமைந்து விடும். இதன் தாக்கம் சோவியத் குடியரசு போல சீனா சிதற வழி வகுத்து விடும் ஆபத்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.