உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!
24 Jan,2022
உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை, குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உட்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களும் வெளியேற பரிசீலிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால், உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.
இதனிடையே, உக்ரைனில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக சாத்தியம் மிக்க துன்புறுத்தல்கள் நடக்கலாம் என்பதால் உக்ரைன், ரஷ்யாவுக்கு அவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியுள்ளது. மேலும், நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் நிலை நிறுத்தியுள்ளது.
படையினரை நிலைநிறுத்தியது தொடர்பாக இதுவரை ரஷ்யா போதிய விளக்கமளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது அமெரிக்கா. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.