உக்ரைனில் ரஷ்ய ஆதரவு ஆட்சி?: பிரிட்டன் அரசு பகீர் குற்றச்சாட்டு!
24 Jan,2022
லண்டன்-உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றி, தங்கள் ஆதரவாளர் தலைமையில் புதிய அரசு அமைக்க ரஷ்யா முயற்சிப்பதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் 'நேட்டோ' அணியில் இணைவதை ரஷ்யா எதிர்த்து வருகிறது. வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியே 'நேட்டோ' என, அழைக்கப்படுகிறது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு உள்ளது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு துறை செயலர் லிஸ் டிரஸ் கூறியதாவது: உக்ரைனில் தற்போதைய ஆட்சியை அகற்றி, தனக்கு விசுவாசமான அரசை நிறுவ ரஷ்யா முயற்சித்து வருகிறது. உக்ரைன் அரசியல்வாதிகளுடன் ரஷ்ய உளவுத் துறையினர் ரகசிய தொடர்பு வைத்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கட்சியான நாஷியின் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான யெவ்ஹெனி முராயேவ் தலைமையில் உக்ரைனில் ஆட்சி அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உடனடியாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேற வேண்டும். உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா மிகப் பெரிய விலையை கொடுக்க நேரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு ஆதரவாக பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை பிரிட்டன் வழங்கியுள்ளது. அதுபோல, லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா உள்ளிட்ட 'பால்டிக்' நாடுகளும் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளன.இந்நிலையில் உக்ரைனில் புதிய அரசை அமைக்க கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
ஜெர்மனி கடற்படை தளபதி ராஜினாமாஐரோப்பிய நாடான ஜெர்மனியின் கடற்படை தளபதி கே - அச்சிம் ஷோயன்பக் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், 'ரஷ்ய அதிபர் புடின் மரியாதைக்கு உரியவர். அவரால் 2014ல் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரிமியா தீபகற்பத்தை உக்ரைன் மீண்டும் பெற முடியாது' என, கூறியிருந்தார்; இதற்கு உக்ரைன் மற்றும் ஜெர்மனியில் கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து கே - அச்சிம் ஷோயன்பக் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.