ரஷியா பேரழிவை சந்திக்கும் - ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை...!
20 Jan,2022
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ரஷியா
உக்ரைன் எல்லையில் மால்டோவா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷிய பாதுகாப்பு படையினர் மீது ரஷிய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என உக்ரைன் மீது ரஷியா குற்றஞ்சாட்ட உள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க உள்ளதாக சமீபத்தில் அமெரிக்கா தெரிவித்தது. இதை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று உக்ரைன் சென்றுள்ளார். ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். ஜோ பைடன் பேசியதாவது:-
உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷியா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும். ரஷியாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர்.
600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். உக்ரைனுக்குள் நுழைய ரஷிய படைகள் உண்மையான விழைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்.
உக்ரைன் எல்லை நோக்கி ரஷியா மேலும் முன்னேறி செல்லும் பட்சத்தில் அதிபர் புதின் (ரஷியா) தான் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை பார்க்க நேரிடும்’ என்றார்.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் போர் ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது.