கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தூண்டப்பட்ட சுனாமி அலைகளால் ஏற்பட்ட சேதத்தை வெளிப்படுத்தும் புதிய படங்கள் டோங்கோவில் இருந்து வெளிவந்துள்ளன.
அவை, பசிபிக் தீவுகள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. அதேநேரம், கடலோரப் பகுதிகளில் அலைகள் மரங்களை இடித்து கட்டிடங்களை கிழித்தெறிந்தன.
பசிபிக் எரிமலைகளைப் புரிந்து கொள்ள செயற்கைக்கோள்கள் ஏன் அவசியம்?
குமுறும் எரிமலை, 40 ஆயிரம் நிலநடுக்கங்கள்: ஐஸ்லாந்தில் தகிப்பு - படங்கள்
சர்வதேச தொலைபேசி இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய வாரங்கள் ஆகலாம்.
டோங்கோ பெரும்பாலும் வெளி உலகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிவின் அளவு குறித்து அதிகமாக அறியப்படவில்லை.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள டோங்கோவின் தூதரகத்தால் வெளியிடப்பட்ட புதிய படங்கள், தலைநகர் நுக்வாலோஃபாவில் உள்ள கார்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் முழுக்க சாம்பல் படர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. தூசியால் நிவாரண விமானங்கள் தரையிறங்குவதற்கும் மிகவும் தேவையான உணவு மற்று குடிநீரை வழங்குவதகும் தடையாக உள்ளது.
தீவின் கடலோரப் பகுதிகளில், "முன்னெப்போதும் இல்லாத பேரழிவு" என்று டோங்கோவின் அரசாங்கத்தால் விவரிக்கப்பட்ட சுனாமி அலைகளின் பின்விளைவுகளையும் படங்கள் காட்டுகின்றன. டோங்கோவில் ஒரு மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் தாக்கியதை அடுத்து, கட்டிடக் கழிவுகள் கரையோரத்தில் சிதறிக் கிடக்கின்றன.
இதற்கிடையில், நியூசிலாந்து விமானப்படையால் எடுக்கப்பட்ட வான்வழிப் படங்கள், தீவுகளின் பல கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகின்றன.
மீட்புப் பணிகளை சாம்பல் தடுக்கிறது
இந்தப் பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் சேதமடைந்த கடலுக்கடியில் உள்ள கேபிளை சரிசெய்வதற்கும் குழுக்கள் 24 மணிநேரமும் உழைத்து வருகின்றன.
டோங்கோவின் பிரதான விமான நிலைய ஓடுபாதையில் இருந்து அடர்த்தியான சாம்பலை அகற்றுவதற்கான முயற்சிகள் புதன்கிழமை முடிவடைந்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது மீட்புக் குழுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சக்கர வண்டிகள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி டார்மாக்கில் இருந்து தூசியை அகற்ற தீவிரமாகப் பணியாற்றினர்.
அவசர உதவி விமானங்கள் விரைவில் தரையிறங்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு உள்ளனர்.
எரிமலை வெடித்ததில் இருந்து மிகக் குறைவான தகவல் தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமாக தலைநகர் நுக்வலோஃபாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் வைத்திருக்கும் சில செயற்கைக்கோள் தொலைபேசிகள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. வெளிநாட்டிலுள்ள பல டோங்கன்கள் அவர்களுடைய உறவினர்களிடமிருந்து அன்பானவர்களிடமிருந்து செய்திகளைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.
டோங்காவின் கரையோரப் படங்கள் சுனாமியைத் தொடர்ந்து கட்டமைப்புகள் மற்றும் மரங்களுக்கு சேதம் விளைவிப்பதைக் காட்டுகின்றன
தொலைத்தொடர்பு நிறுவனமான டிஜிசெல் புதன்கிழமை, சர்வதேச அழைப்புகளை மீட்டெடுக்க முடிந்ததாகக் கூறியது. இருப்பினும் பிபிசியால் டோங்கோவுக்குத் தொடர்புகொள்ள முடியவில்லை.
தீவுகளுக்கான ஒரே கேபிள் இரண்டு இடங்களில் சேதமடைந்துள்ளதால், இணையம் உட்பட முழு இணைப்பும் மீண்டும் கிடைப்பதற்கு நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேலும்கூட ஆகலாம்.
புதன்கிழமை காலை, செஞ்சிலுவை சங்கம், எரிமலை வெடிப்புக்குப் பிறகு முதன்முறையாக டோங்கோவில் உள்ள தனது குழுவுடன் "மகிழ்ச்சியுடன்" தொடர்புகொள்ள முடிந்ததாகக் கூறியது.
"துரதிர்ஷ்டவசமாக டோங்கோவில் இருந்து இரவோடு இரவாக வீடுகள் அழிக்கப்பட்ட, அழிவுகரமான செய்தி வருகிறது," என்று அதன் பசிபிக் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், கேட்டி கிரீன்வுட் பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில் கூறினார்.
மேலும், செஞ்சிலுவை சங்கக் குழுக்கள் சுத்தமான தண்ணீரை விநியோகிக்கச் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் தங்கல் மழைநீர் தொட்டிகளை சாம்பலில் இருந்து பாதுகாக்கும் வகையில் மூடி வைக்கவேண்டும் என்று சமீபத்தில் பிரச்சாரம் செய்ததாகவும் பாட்டில் தண்ணீர் விநியோகத்திற்கு ஊக்கம் அளித்ததாகவும் கிரீன்வுட் கூறினார்.
'செமுரு எரிமலை வெடிப்பு' - விண்ணை மறைக்கும் புகை, விமானங்களுக்கு எச்சரிக்கை
பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து முதலுதவி கப்பல்கள் வெள்ளிக்கிழமை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பீனி ஹெனாரே பிபிசியிடம், கப்பல்கள் 250,000 லிட்டருக்கும் அதிகமான நன்னீர் மற்றும் உப்புநீக்கும் கருவிகளைக் கொண்டுவருவதாகக் கூறினார்.
"டோங்கன் அரசிடம் இருந்து தண்ணீர் தேவையே மிக முக்கியப் பிரச்னையாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.
ஆனால், டெலிவரிகள் கோவிட் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் டோங்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அக்டோபரில் தான் அந்த நாடு அதன் முதல் கோவிட் நோய்த்தொற்றை பதிவு செய்தது.
கடைகளில் உணவுப் பொருட்கள் குறைவாக இருப்பதாகவும் டெலிவரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
ஹூங்கா டோங்கா-ஹூங்க ஹாபாய் எரிமலை வெடிப்பு அமெரிக்கா வரை உணரப்பட்டது. பெருவில், எண்ணெய் கசிவைத் தொடர்ந்து தலைநகர் லிமாவுக்கு அருகிலுள்ள கடற்கரைகள் மூடப்பட்டபோது, அசாதாரணமாக உயர்ந்த அலைகளில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.