அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளை.!
17 Jan,2022
வளர்ந்த நாடான அமெரிக்காவிலும் கொள்ளைக்கு பஞ்சம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அங்கு சரக்கு ரெயில்களில் கொள்ளையடிக்கப்படுவதாக அந்த நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிறுவனமான யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொள்ளை காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் செயல்படுவதை தவிர்க்கலாம் என்றும் கூறி உள்ளது.
சரக்கு ரெயில்களில் உள்ள கண்டெய்னர்களில் பூட்டை உடைத்து அதில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் காலி டப்பாக்களை வீசி எறிகின்றனர். இப்படி வீசி எறியப்பட்டு அமேசான், பெட்எக்ஸ் நிறுவனங்களின் காலி பெட்டிகள் குவியல்களாக கிடப்பதை பார்த்தவர்கள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அது வைரல் ஆகி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே ஆண்டுக்கு ஆண்டு திருட்டு சுமார் 160 சதவீதம் அதிகரித்துள்ளது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அரசு வக்கீலுக்கு யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் புகார் செய்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவதாக யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்ததாக சி.என்.என். கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது