பணம் கொடுத்து கொரோனா நோயை வாங்கும் விசித்திரஇத்தாலி மக்கள்!
13 Jan,2022
இத்தாலியில் தடுப்பூசி மறுப்பாளர்கள் 110 பவுண்டுகள் வரை செலவிட்டு கொரோனா நோயாளிகளுடன் உணவருந்தி, தங்களுக்கும் நோய் பரவ வேண்டும் என காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்ற விதி இருப்பதால், தற்போது தடுப்பூசி மறுப்பாளர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்ட மக்களுடன் பணம் செலவிட்டு கொரோனா தொற்றை வாங்குகின்றனர்.
பிப்ரவரி முதல் திகதியில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விதி இத்தாலியில் அமுலுக்கு வர இருக்கிறது.
தடுப்பூசி மறுப்பாளர்கள் பெருந்தொகை அபராதமாக செலுத்த நேரிடும் அல்லது தங்கள் வேலையை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்துள்ள மக்களுக்கு தடுப்பூசி கட்டாயமல்ல.
அவர்களுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி இந்த காலகட்டத்தில் உருவாகும் என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கண்டிப்பாக தேசிய சுகாதார அட்டையில் தங்கள் தரவுகளை பதிவு செய்யவும் வேண்டும்.
அப்படி பதிவு செய்துள்ள மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியில் இருந்து விலக்கு அளிக்கப்படும், அதற்காக தடுப்பூசி மறுப்பாளர்கள் மரண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது முதல், கொரோனா தொற்றாளர்களை அழைத்து தடுப்பூசி மறுப்பாளர்கள் விருந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தாங்கள் பூரண குணமடைந்து திரும்புவோம் என்றே இவர்கள் நம்புகின்றனர். Tuscany பகுதியில் அவ்வாறாக நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கு தலா 110 பவுண்டுகள் பரிசாக அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுபோன்ற கொரோனா விருந்து கூட்டங்களை தடுக்க பொலிசார் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். இத்தாலியில் இருந்து கொரோனா விருந்து கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த 'கொரோனா வைரஸ் விருந்துகளில்' கலந்து கொண்ட பின்னர் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் பலர் கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
வடக்கு இத்தாலியில் இதுபோன்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 55 வயதான ஆஸ்திரிய நாட்டவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவமும் நடந்துள்ளது.
இதே விருந்தில் கலந்து கொண்ட சிறார் உட்பட மூவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாலி முழுவதும் பல மாகாணங்களில் இதுபோன்ற கொரோனா விருந்துகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.