சிரியாவில் 4,000 பேரை அணு அணுவாக சித்திரவதை செய்த ஒருவருக்கு, ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று ஆயுள்தண்டனை விதித்துள்ளது... அப்படி எளிதாக இந்த செய்தியை முடித்துவிடமுடியாது! காரணம், இந்த செய்தி அசாதாரணமான ஒரு செய்தி. 2011ஆம் ஆண்டு, சிரிய அதிபரான பஷார் அல் அசாதுக்கு (Bashar al-Assad) எதிராக சிரியாவில் போராட்டங்கள் வெடித்தன. தன்னை எதிர்ப்போரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயன்றார் அசாத்.
அப்போது, பூமியிலுள்ள நரகம் என்று அழைக்கப்படும் Al-Khatib என்னும் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்ப்பாளர்கள், கொடூரமான முறையில் கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டார்கள்.
2011க்கும் 2012க்கும் இடையில், ஏராளமானோர் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். பெண்கள் கொடூரமாக பாலியல் தாக்குதலுக்கும் வன்புணர்வுக்குள் உள்ளாக்கப்பட்டார்கள்.
டாமாஸ்கஸிலுள்ள அந்த சிறையின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த Anwar Raslan என்பவரின் கண்காணிப்பின் கீழ்தான் இந்த கொடூர சித்திரவதைகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையில், ஜேர்மனியில் புகலிடம் கோரி Anwar செட்டில் ஆகிவிட்டார்.
2015ஆம் ஆண்டு ஜேர்மனி சிரிய அகதிகளுக்கு தன் நாட்டைத் திறந்துவிட, 800,000க்கும் அதிகமான அகதிகள் ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தார்கள்.
அவர்கள் சிரியாவில் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை கண்ணீருடன் விவரிக்க, ஜேர்மனியின் மனித உரிமை சட்டத்தரணிகள் வழக்கைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள்.
அதன் விளைவாக, 2019இல் Anwar கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அவரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்களில் உயிர் தப்பியவர்கள் தாங்கள் எவ்விதம் துன்புறுத்தப்பட்டோம் என சாட்சியமளித்தார்கள்.
அந்தக் கதைகள் மிக கொடூரமாக இருந்தன. பலர் நாள் கணக்காக அடித்து நொறுக்கப்பட்டு, ஜில்லென்ற நீர் அவர்கள் மீது வீசியடித்து, மணிக்கணக்காக கட்டித் தொங்கவிடப்பட்டார்கள். பெண்கள் வன்புணரப்பட்டார்கள். நகங்கள் பிடுங்கப்பட்டு மின்சார ஷாக் கொடுக்கப்பட்டது பலருக்கு.
உயிர் தப்பிய ஒருவர், நாளெல்லாம் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் மக்களுடைய அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இஒருக்கும் என்கிறார். அத்துடன், அவரை சித்திரவதை செய்தவர்கள், அதற்கென்று விசேஷமான கருவிகளை வைத்திருந்ததாகவும், அவர்கள் செய்வதை அனுபவித்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Anwar மீது, 58 கொலைக்குற்றச்சாட்டுகள், வன்புணர்வு, பாலியல் தாக்குதல் மற்றும் குறைந்தது 4,000 பேரை சித்திரவதை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது, அவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
இந்த செய்தி ஏன் அசாதாரணமானது என்றால், எந்த சிரியாவிலிருந்து Anwar ஜேர்மனியில் புகலிடம் கோரினாரோ, அதே சிரியாவிலிருந்து சித்திரவதைக்குத் தப்பி அகதிகளாக ஜேர்மனிக்கு வந்தவர்களாலேயே அவர் தற்போது சிக்கியுள்ளார்.
அடுத்ததாக, எந்த ஜேர்மனியில் அவர் அடைக்கலம் கோரினாரோ அந்த ஜேர்மனியிலேயே அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது அசாதாரணமானதுதானே!