அமெரிக்கர்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஈரான்
09 Jan,2022
ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள அமெரிக்கர்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது.
ஈரான் ராணுவத்தின் குத்ஸ் போர்ப்படை பிரிவின் தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர் கடந்த 2020 ஜனவரி 3-ம்தேதி நடந்த ஆளில்லா உளவு விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின்பேரில் இந்த படுகொலை நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அமெரிக்கா தரப்பிலும் மறுக்கவில்லை.
இந்த நிலையில், சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. சுலைமானி கொலையில் மொத்தம் 51 பேர் தொடர்புடையவர்கள் என்று ஈரான் அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி, அவர்களின் சொத்துக்கள் ஈரானில் எங்கு இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும்.
அவர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையை தகர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மறைந்த ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, பேசிய ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, 'காசிம் சுலைமானியின் படுகொலைக்கு காரணமான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். சுலைமானியின் கொலைக்கு ஈரான் அரசு பழிதீர்க்கும்' என்று அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே ஏமன் நாட்டிற்கு ஈரான் அரசு ஆயுதங்களை கடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை குற்றம் சாட்டியுள்ளது. ஏமன் நாட்டில் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவு அளிக்கிறது.
இதையும் படிங்க : உலக நாடுகளை மிரட்டும் கொரோனா... சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிப்பு
எதிர்த்தரப்பான ராணுவத்திற்கும், சர்வதேச படைகளுக்கும் சவூதி அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரானில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை நிலம் மற்றும் கடல் மார்க்கமாக ஏமன் நாட்டிற்கு ஈரான் கடத்தியுள்ளதாக ஐநா கூறியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச விதி மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எந்த ஆயுதமும் வழங்கக் கூடாது என்று ஐ.நா. கடந்த 2015-ல் தடை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்கள் மீதான ஆயுத கடத்தல் குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது.