சீனாவின் 10 மாகாணங்களில் குழந்தை பிறப்பு விகிதம், 1 சதவீதத்திற்கும் கீழாக குறைந்தது
06 Jan,2022
பீஜிங்,-கடந்த 2020 நிலவரப்படி சீனாவின் 10 மாகாணங்களில் குழந்தை பிறப்பு விகிதம், 1 சதவீதத்திற்கும் கீழாக குறைந்து உள்ளது.நம் அண்டை நாடான சீனா, 1980களில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனால் குழந்தை பிறப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து, 2016ல் இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. எனினும், முதியோர் எண்ணிக்கை அதிகரித்தும், குழந்தை பிறப்பு குறைந்தும் வந்ததால், 2021 ஆகஸ்டில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, திருமண விடுப்பு, பேறு கால விடுப்பு, கூடுதல் விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
எனினும், சீனாவின் மக்கள் தொகை மிக மந்தமாக வளர்ச்சி கண்டு, 141 கோடி என்ற அளவிற்கே உள்ளது. இந்நிலையில், ஹெனான், தியான்ஜென் உள்ளிட்ட 10 மாகாணங்களில் குழந்தை பிறப்பு விகிதம், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக, 2021 மக்கள் தொகை புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
கடந்த, 1978க்குப் பின் ஹெனான் மாகாணத்தில் முதன் முதலாக, குழந்தை பிறப்பு, ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. சீனாவில், கல்வி, வீடு உள்ளிட்ட அத்தியாவசிய வாழ்க்கைச் செலவினம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே, 1990க்குப் பின் பிறந்தோர், அதிக குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமின்றி உள்ளதாக கூறப்படுகிறது.