அமெரிக்கா சொல்வதைப் போன்று சீனாவுக்கு, அணு ஆயுதங்களை பெருக்கும் எந்த எண்ணமோ, திட்டமோ கிடையாது. நாட்டின் பாதுகாப்பு கருதி குறைந்த எண்ணிக்கையில் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்துள்ளோம்.
அணு ஆயுதங்கள் நவீனமயமாக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் போர்களில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அந்நாடு தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த அணு ஆயுதங்கள் தொடர்பான வல்லரசு நாடுகள் மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதில் உலக நாடுகளின் நலன் கருதி எதிர்காலத்தில் எந்த விதமான அணு ஆயுத தாக்குதல்களும் நடைபெறக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்கள் நவீனப்படுத்தப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று, அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில்தான் அணு ஆயுதங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அணு ஆயுத வல்லரசு நாடுகள் என்று இவை அழைக்கப்படுகின்றன.
இதற்கிடையே சீனா அணு ஆயுதங்களை அதிகப்படுத்துவதாக தகவல் பரவியது. குறிப்பாக கடந்த ஆண்டு, ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் ஹைப்பர்சானிக் அணு ஆயுதத்தை சோதித்தது. இதன் அடிப்படையில், இதை விட சற்று குறைவான சக்தி கொண்ட ஆயுதங்களை சீனா வைத்திருக்கும் என்ற எண்ணம் உலக நாடுகள் மத்தியில் நிலவுகிறது.
சீனா மீது அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டில் 2027-க்குள் 700 அணு ஆயுதங்களையும், 2030-க்குள் 1,000 அணு ஆயுதங்களையும் சீனா உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த திட்டம் செயல்வடிவில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-
உலக அளவில் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ளன. அவர்கள் கட்டாயமாக தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும். அமெரிக்கா சொல்வதைப் போன்று சீனாவுக்கு, அணு ஆயுதங்களை பெருக்கும் எந்த எண்ணமோ, திட்டமோ கிடையாது. நாட்டின் பாதுகாப்பு கருதி குறைந்த எண்ணிக்கையில் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்துள்ளோம்.
அவற்றை நவீனப்படுத்தும் நடவடிக்கை மட்டுமே நடைபெறுகிறது. தாய்வான் மீது அணு ஆயுத தாக்குதல்களை சீனா ஒருபோதும் நடத்தாது.நிச்சயமாக அணு ஆயுதங்கள் பேரழிவை உருவாக்கும். அவற்றை போரில் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.