ஒமைக்ரான் பாதிப்பு. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் திணறல்
04 Jan,2022
அடுத்து வரும் சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும், இதன்காரணமாக மருத்துவ சேவைகளை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் ஏறுமுகமாக உள்ளன. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 2,54,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதென்று அமெரிக்க மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
அரிசோனா மாகாணத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம்பேருக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பபட்டுள்ளன. மற்ற மாகாணங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட 13 சதவீத பாதிப்பு உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் உடல் பலவீனம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க், வாஷிங்டன், புளோரிடா மாகாணங்களில் பாதிப்பு சற்று அதிகம் உள்ளது. குறிப்பாக நியூயார்க்கில் கொரோன பாசிட்டிவ் ரேட் 33 சதவீதமாக இருக்கிறது. அதாவது, 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றால் அவர்களில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதேபோன்று ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனிலும் பாதிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன. திங்களன்று மட்டும் பிரிட்டனில் புதிதாக 1,57,758 பேருக்கு தொற்று உறுதீ செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொற்று பிரிட்டனில் அதிகரித்து வருவதால் அந்நாட்டு சுகாதாரத்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அடுத்து வரும் சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும், இதன்காரணமாக மருத்துவ சேவைகளை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
நேற்று பிரான்சில் 67,461 பேருக்கும் ஜெர்மனியில் 26,345 பேருக்கும், இத்தாலியில் 68,052 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பெயினில் மட்டும் நேற்று சுமார் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.