60 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தியும் பயனில்லை; இஸ்ரேல் பிரதமர்
03 Jan,2022
ஜெருசலேம்: இஸ்ரேலில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தியும் பயனில்லை என அந்நாட்டு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதையொட்டி சில நாடுகள் பாதுகாப்பு கருதி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அடுத்ததாக பூஸ்டர் டோஸ்களை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இதுவரை 42 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தியும் எந்த பயனுமில்லை என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். ஜெருசலேம் நகரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னெட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இஸ்ரேலில் மொத்தமுள்ள 93 லட்சம் மக்கள் தொகையில், 42 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதாவது 60 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனாலும், கொரோனா புயல் விடுவதாக இல்லை. கடந்த இரு வாரங்களில் 700 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று (ஜன.,2) 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலவீனமானவர்களை பாதுகாத்தவாறே, நாட்டின் பொருளாதாரத்தை கூடுமான வரையில் தொடர்ந்து இயங்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.