அமெரிக்காவில் விமான சேவை ரத்து: பயணிகள் கடும் தவிப்பு
02 Jan,2022
மோசமான வானிலை, கொரோனா பாதிப்பு போன்றவற்றால் புத்தாண்டு அன்று ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இருந்து புத்தாண்டு வரை அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மிப்பெரிய அளவில் விடுமுறையாக கொண்டாடப்படும். இந்த விடுமுறையில் மக்கள் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். வெளியூர்களுக்கு செல்வதால் விமான சேவை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
ஆனால், அமெரிக்காவில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. அதேபோல் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. விமான ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி நேற்றுமுன்தினம் (டிசம்பர் 31-ந்தேதி) அமெரிக்காவில் 2,604 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் 4,529 விமாங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று 3, 447 உள்நாட்டு விமானங்கள் வந்தடைவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. உலகளில் 7602 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் புத்தாண்டு கொண்டாட செல்ல இருந்தவர்களும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்ப இருந்தவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் முடங்கிய பயணிகள் லேப் டாப், செல்போன் மூலம் நேரத்தை செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.