உலகம் முழுதும் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்
01 Jan,2022
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும், உலகின் பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது.
ஆங்கில புத்தாண்டு தினம் உலகம் முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது. உலகிலேயே முதன் முதலாக பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளான டோங்கா, சமோவா நாடுகள் புத்தாண்டை வரவேற்றன. இந்திய நேரப்படி நேற்று மாலை 3:31 மணிக்கு இங்கு புத்தாண்டு பிறந்தது. இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரம் புத்தாண்டை வரவேற்றது.
இங்குள்ள ஸ்கை டவர் மற்றும் துறைமுகம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுதும் முடங்கியிருந்தது. இந்த ஆண்டு உருமாறிய கொரோனா வைரசானா ஒமைக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல நாடுகள் தடை விதித்து இருந்தன.
ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாட்டம் களைகட்டவில்லை.நம் நாட்டில் டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
மக்கள் வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாடினர். வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுடன் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.அமெரிக்காவுக்கு அருகிலுள்ள ஹாலந்த் மற்றும் பகேர் தீவுகள் ஆகியவை புத்தாண்டை கடைசியாக வரவேற்கின்றன. இங்கு இந்திய நேரப்படி இன்று மாலை 5:30 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கிறது.