உக்ரைன் பிரச்னை எதிரொலி புடின் - பைடன் மோதல்
01 Jan,2022
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் 'நேட்டோ' நாடுகள் அணியில் இணைய விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. ஆனால் இந்த இணைப்புக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து புடின் உத்தரவின் அடிப்படையில் உக்ரைன் எல்லை நெடுக ஒன்றரை லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து கடந்த மாத துவக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, 'உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகள் விதிக்கப்படும்' என, ஜோ பைடன் எச்சரித்தார்.
இந்நிலையில் நேற்று புடின் அழைப்பின் அடிப்படையில் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சு குறித்து புடினின் வெளிவிவகாரத் துறை ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறியதாவது:
இரு தலைவர்களும் மனம் விட்டு பேசினர். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், ரஷ்யா மீது மேலும் அதிக தடைகள் விதிக்கப்படும் என, ஜோ பைடன் தெரிவித்தார்.
அதற்கு 'அமெரிக்கா அத்தகைய நடவடிக்கை எடுத்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய தவறாக அமைந்து விடும்' என, புடின் எச்சரித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேச்சு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறும்போது, 'உக்ரைன் தொடர்பாக ரஷ்யா அடுத்து எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து அமெரிக்காவின் நிலைப்பாடு இருக்கும்' என்றனர். உக்ரைன் விவகாரம் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது