கொரோனா, டெல்டா, ஒமைக்ரானை தொடர்ந்து, இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
01 Jan,2022
கொரோனா..டெல்டா... என இரண்டு மாபெரும் அலைகளைக் கடந்து, ஒமைக்ரான் தற்போது அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தநிலையில், இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன், சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) பாதிப்புகளும் ஏற்படுத்துவதால், இதற்கு ஃபுளுரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு, இந்த புதிய ஃபுளுரோனா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பெண், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பதும், இவரது மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொரோனா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு பெரிய உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை, லேசான அறிகுறிகளே தென்படுகின்றன, விரைவில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இஸ்ரேலின் சுகாதாரத்துறை ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன. சாதாரண காய்ச்சலுக்கான கிருமியும், கொரோனாவின் மோசமான பாதிப்புகளும் ஒன்று சேர்ந்து மிக மோசமான பாதிப்பு ஏற்படுத்துமோ என்று கவலை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஒமைக்ரான் பாதிப்பினால், இஸ்ரேலில் ஐந்தாவது கொரோனா அலை தாக்கியிருக்கும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டையே தற்போது கவலையை ஆழ்த்தி உள்ளது.