உக்ரைனை ஆக்கிரமித்தால் பதிலடி கொடுப்போம் - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
31 Dec,2021
கடந்த 2013-ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் ஜனாதிபதி விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.
அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷ்ய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.
ரஷ்ய இராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினா்.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.
குளிர் காலத்தின் போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அச்சம் தெரிவித்துள்ளன. இது ரஷ்யா – அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் உடனான பதட்டத்தை தணிக்குமாறும், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும் என ரஷ்ய அதிபர் புதின் உடனான ஜோ பைடன் உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.