மண்டேலாவின் சிறை சாவி ஏலம் தடுக்க தென் ஆப்ரிக்கா தீவிரம்
26 Dec,2021
முன்னாள் அதிபரான மறைந்த நெல்சன் மண்டேலாவின் சிறை சாவியை தனியார் நிறுவனம் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் தென் ஆப்ரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் முதல் அதிபராக பதவி வகித்தவர் நெல்சன் மண்டேலா. அதிபராவதற்கு முன் ஆப்ரிக்க தேசிய காங்., கட்சியின் ராணுவ பிரிவு தலைவராக இருந்த மண்டேலா, நிறவெறி பிடித்த அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்.அதன் விளைவாக மண்டேலாவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
இதில் 18 ஆண்டுகள், ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.அங்கு சிறைக் காவலராக இருந்தவர் கிறிஸ்டோ பிராண்ட். இவர் மண்டேலாவின் சிறை அறையை பூட்ட பயன்படுத்திய சாவியை அமெரிக்காவை சேர்ந்த, 'குர்ன்சி ஆக்ஷன்ஸ்' என்ற ஏலம் விடும் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார். அந்த சாவியை ஏலம் விட முடிவு செய்துள்ள அந்த நிறுவனம், வரும் ஜன., 28ம் தேதி அதற்கான ஏலம் விடப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த ஏலத்தை தடுத்த நிறுத்த தென் ஆப்ரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து நாட்டின் கலாசார துறை அமைச்சர் நாத்தி தேத்வா கூறியதாவது:நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்த அந்த சாவியை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
அதுவும், தென் ஆப்ரிக்க அரசிடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை.அந்த சாவி, தென் ஆப்ரிக்க மக்களுக்கு சொந்தமான ஒன்று. அது தனிப்பட்ட நபர் யாருக்கும் சொந்தமானது அல்ல. அதை உரிமைக் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.அந்த சாவியை தென் ஆப்ரிக்காவுக்கு மீட்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் முன்னெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.