'விசா' நேர்காணல் ரத்து அமெரிக்கா திடீர் முடிவு
25 Dec,2021
உலகளவில் 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சில வகை 'விசா'க்களுக்கான நேர்காணல் ஓராண்டிற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு வல்லுனர்களை பணிக்கு அமர்த்துவதற்காக 'எச் - 1பி விசா' வழங்கப்படுகிறது. இந்த விசா வாயிலாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வல்லுனர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கீழ்கண்ட குடியேற்றம் சாரா விசா விண்ணப்பதாரர்களுக்கு 2022 டிச., 31 வரை நேர்காணலை தற்காலிகமாக ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதன்படி சிறப்பு வகை பணி வல்லுனர்களுக்கு வழங்கப்படும் 'எச் - 1பி' விசாவுக்கான நேர்காணல் 2022 டிச., 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பயிற்சி அல்லது சிறப்பு கல்வியாளர்களுக்கான 'எச் - 3' விசா, நிறுவனங்கள் இடையிலான பணியாளர் பரிமாற்றத்திற்கான 'எல்' விசா, அசாதாரண ஆற்றல் உள்ளோர் அல்லது சாதனையாளர்களுக்கான 'ஓ' விசா ஆகியவற்றுக்கும் நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது.
விளையாட்டு, கலை, பொழுதுபோக்கு துறை சார்ந்தவர்களுக்கான 'பி' விசா, சர்வதேச கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கான 'க்யூ' விசா ஆகியவற்றுக்கு நேர்காணல் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது.
இது தவிர தற்காலிக வேளாண் மற்றும் வேளாண் சாரா ஊழியர்களுக்கான 'எச் - 2' விசா, மாணவர்களுக்கான 'எப் மற்றும் எம்' விசாக்கள், பரஸ்பர மாணவர்கள் வருகைக்கான 'ஜே' விசா ஆகியவற்றுக்கும் நேர்காணல் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் அமெரிக்க துாதரகங்கள், விண்ணப்பங்களின் தன்மை மற்றும் உள்ளுர் நிலவர அடிப்படையில் தேவைப்பட்டால் விண்ணப்பதாரரை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லலாம்.விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு விரிவான தகவல்களை பெற, அமெரிக்க துாதரக வலைதளங்களை பார்வையிடலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.