ஒமைக்ரான் தொற்று எதிரொலி : தாய்லாந்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்
21 Dec,2021
சுற்றுலாவுக்கு பெயர்போன நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 1ண ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தாய்லாந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது, ‘பரிசோதனை செய்து செல்’ (டெஸ்ட் அண்ட் கோ) என்கிற திட்டத்தின் கீழ் தாய்லாந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, அதில் தொற்று இல்லை என உறுதியானால் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தாய்லாந்திலும் நுழைந்துவிட்டது. மேலும் இந்த வைரஸ் அங்கு வேகமாக பரவலாம் என்கிற கவலை எழுந்துள்ளது.
இதன் காரணமாக ‘பரிசோதனை செய்து செல்’ திட்டத்தை ரத்துசெய்து, தாய்லாந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரையும் 14 நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.