ஒமைக்ரான் : 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த தாயராகும் நாடுகள்!
14 Dec,2021
கொரோனாவிற்கு எதிராக 3-வது டோஸ் தடுப்பூசி அவசியமா என இந்தியாவில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், 4-வது டோஸ் தடுப்பூசியை செலுத்த சில நாடுகள் தயாராகி வருகின்றன.
கொரோனாவிற்கு எதிராக 3-வது டோஸ் தடுப்பூசி அவசியமா என இந்தியாவில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், 4-வது டோஸ் தடுப்பூசியை செலுத்த சில நாடுகள் தயாராகி வருகின்றன.2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் இந்த நவம்பரில் 3-வது அலையை நோக்கி உலக நாடுகளை நகர்த்தி வருகிறது. இதற்கான தடுப்பூசிகள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2 டோஸ் போட்டால் மட்டுமே முழுமையான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும் என முதலில் கூறப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியது போலவே டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் பெரும் பலனையும் கொடுத்தன. இந்த சூழலில்தான் தற்போது ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்காததால் தற்போது பூஸ்டர் டோஸ்கள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதித்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதால் 3-வது டோஸ் போட்டால் முழுமையாக காத்துக்கொள்ளலாம் என ஃபைசர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் பௌர்லா (Albert Bourla) தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூஸ்டர் போட்டு 12 மாதங்களுக்குள் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தினால் அடுத்த கொரோனா திரிபு வந்தாலும் பிரச்னைகள் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கான பணிகளை தங்கள் நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும், 2022-ம் ஆண்டு 4-வது டோஸ் தடுப்பூசி தயாராகி விடும் எனவும் பௌர்லா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2-வது வாரத்தில் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக உள்ளது. இதில் 5 கோடியே 20 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஒன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாடர்னா நிறுவனமும் 4-வது டோஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் களமிறங்கிவிட்டது.
இது ஒருபக்கம் இருக்க இஸ்ரேல் நாட்டில் ஏற்கெனவே 3 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டு 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசியே போதாது என்ற சூழலில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்திறன் கொண்டதாக இருக்குமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேசமயம் விரைவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்தியவர்கள் 3 டோஸ் வரை தடுப்பூசி போடும் சூழல் வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்