ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்: தீர்ப்பு சொல்லும் சீன ஊடகம்!
10 Dec,2021
இந்தியா போருக்கு தயார் நிலையில் இல்லை என்பதை குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து காட்டுவதாகவும், மனித தவறே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் விஷமப் பிரசாரம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: பனிமூட்டமான வானிலை, மின் கம்பிகளில் சிக்குதல், இயந்திரக் கோளாறு அல்லது ஹெலிகாப்டர் தவறான இடத்தில் உயரத்தை குறைத்தது ஆகியவை காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என இந்திய பத்திரிகைகள் ஊகிக்கின்றன. இதன் மூலம் மனித காரணிகளால் தான் பெரும்பாலும் விபத்து நடந்து இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் ரஷ்யாவின் எம்.ஐ.,17 வகை ஹெலிகாப்டர்கள் மற்ற நாடுகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
எம்.ஐ.,17.வி5. அதிக சக்தி வாய்ந்த என்ஜின்கள் மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டது. இது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்திய ராணுவம், உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை, வெளிநாட்டு தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, ரஷ்யா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என பல வகையான ஹெலிகாப்டர்களை இயக்குகிறது. இது பராமரிப்பு மற்றும் தளவாட உதவிகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்தியா ஒரு தளர்வான, கட்டுப்பாடில்லாத ராணுவ கலாச்சாரம் கொண்டதாக அறியப்படுகிறது. இந்திய துருப்புக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. 2013-ல் ஒரு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்தது, 2019-ல் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ உட்பட முந்தைய விபத்துகளுக்கான காரணங்கள் அனைத்தும் மனித தவறுகளாக இருந்திருக்கலாம்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வானிலை மேம்படும் வரை பயணத்தை ஒத்திவைத்திருந்தால் அல்லது விமானி மிகவும் கவனமாகவும், திறமையாகவும் பறந்திருந்தால், அல்லது தரை குழுவினர் ஹெலிகாப்டரை சிறப்பாகக் கவனித்து கொண்டிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம். இந்த விபத்து இந்திய ராணுவத்தின் போர்த் தயார்நிலையின்மையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு ஹெலிகாப்டர் விபத்தை வைத்து சீனா அரசியல் செய்துள்ளது.