உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு?
09 Dec,2021
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் காணப்படாத அளவில் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு இருக்கும் என பிரித்தானிய ஆயுதப் படைகளின் புதிய தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் அதிகரித்து வரும் நெருக்கடி ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் அவர் விபரித்தார்.
இதனிடையே உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவின் ஊடுருவலை தடுப்பதற்கான வழிகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறினார்.
அதேவேளை உக்ரேனிய இராணுவம் நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும் நாங்கள் – கூட்டாளர்களுடன் சேர்ந்து இந்த விலையை புடினுக்கு தாங்க முடியாததாக மாற்ற வேண்டும்’ எனவும் கூறினார்.
உக்ரைனில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் என்ன செய்ய விரும்புகிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என்று பிரித்தானியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர்.
ஆனால், புத்தாண்டின் தொடக்கத்தில் 175,000 ராணுவ வீரர்களை உள்ளடக்கிய பலமுனைத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறு ஒன்று இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அந்த எண்ணிக்கையில் பாதி உக்ரைன் எல்லைக்கு அருகில் இருப்பதாக ஏற்கனவே கருதப்படுகிறது.
உக்ரைனை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குற்றம் சாட்டி, இராணுவ நடவடிக்கைக்காக தனது படைகள் அணிதிரட்டப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.