வாஷிங்டன்-ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லையில் ரஷ்யா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.
இதில் தீர்வு ஏதும் ஏற்படாததால், உக்ரைனில் பதற்றம் நீடிக்கிறது.சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைனை கைப்பற்ற அதன் அண்டை நாடான ரஷ்யா முயற்சித்து வருகிறது. உக்ரைனின் கிரீமியா பகுதியை ஏற்கனவே ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந் நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வருகிறது.ரஷ்யாவின் மிரட்டல்'நேட்டோ' அமைப்பில் உக்ரைன் இணைந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யா இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், உக்ரைனில் பதற்றம் நிலவுகிறது.ரஷ்யாவின் மிரட்டல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 'கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும்' என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்துள்ளன.இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று இரண்டு மணி நேரம் பேசினர்.
ஆனால், இந்தப் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இந்த பேச்சு குறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகர் ஜேக் சுலைவான் கூறியதாவது:துவக்கத்திலேயே தன்னுடைய நிலைப்பாட்டை ஜோ பைடன் தெளிவாக குறிப்பிட்டார். உக்ரைனை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மிகக் கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்பதை உறுதிபடக் கூறினார்.
பதற்றத்தை தவிர்க்க, ரஷ்யா உடனடியாக படைகளை திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்காக கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்கா தயங்காது என்றும் குறிப்பிட்டார்.மேலும், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், தளவாடங்களும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, ரஷ்ய அதிபரின் ஆலோசகர் யூரி உஷகோவ் கூறியதாவது:ரஷ்ய படைகள் தன் எல்லையிலேயே உள்ளன. யாரையும் மிரட்டுவதற்காக அவை நிறுத்தி வைக்கப்படவில்லை என்பதை புடின் தெளிவுபடுத்தினார்.ஏற்கனவே, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் பொருளாதார தடைகள் விதித்தால், அதன் பாதிப்பை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சந்திக்க நேரிடும் என்பதை பைடன் உணர்ந்திருப்பார் என, நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
முடிவு எட்டப்படவில்லை
இரு அதிபர்கள் இடையேயான பேச்சில் எந்த முடிவும் எட்டப்படாதது, உக்ரைனில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை, ரஷ்யா துவங்கும் என, உக்ரைன் அஞ்சுகிறது. இதற்கிடையே, பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களையும் ரஷ்யா தன் எல்லைக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தப் பிரச்னை தொடர்பாக, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஜோ பைடன் பேசி வருகிறார்.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாட்டின் தலைவர்களுடன் அவர் நேற்று முன் தினம் பேசினார். உக்ரைன் அதிபர் விளாதிமோர் ஜெலன்ஸ்கியுடன் அவர் பேச உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.