கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை உயர்த்திய இத்தாலி அரசு
06 Dec,2021
ஐரோப்பிய நாடான இத்தாலியில், ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இனி திரையரங்கு, விளையாட்டு நிகழ்வுகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அந்த வகையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு 400 யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் இத்தாலியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இத்தாலி தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருந்தது. அங்கு மட்டும் கொரோனாவால், ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
6 கோடி பேர் வசிக்கும் இத்தாலியில், தற்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் கணிசமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து, கட்டுப்பாடுகளை இத்தாலி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தொடர் நடவடிக்கைகள் காரணமாக அங்கு 85% பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயலாற்றும் என்று பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் 40 முதல் 50 சதவீதம் வரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தியாவில் 21 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதேநேரம் மைக்ரான் பரவ தொடங்கினால் அதனை எதிர் கொள்ளவும் தமிழக அரசு தயாராகிவருகிறது.