குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவும் ஒமைக்ரான் கொரோனா திரிபு - மருத்துவ நிபுணர்கள் கவலை
05 Dec,2021
தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரோனா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்ரிக்கா மற்றும் போஸ்ட்வானாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரானை கவலைக்குறியதாக அறிவித்துள்ள உலக சுகாதார மையம், அதன் பரவல் வேகமும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட பல்கலைகழக மாணவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால், அறிகுறிகள் லேசானதாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது. ஒமைக்ரான் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் முதல் மூன்று அலைகளின் போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்றும் தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது முதல் தென் ஆப்ரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் இருமடங்காக அதிகரிக்கிறது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வோமா வீக் என பெயரிட்டு டிசம்பர் 10- ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு வீச்சில் தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் 42 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரதமர் போரிஸ் ஜான்சனும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். பிரிட்டனில் 75 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது வரை நெப்ராஸ்கா, மேரிலாந்து, பென்சில்வேனியா, உட்டா. நியூ ஜெர்சி, கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட 10 மாகாணங்களில் ஒமைக்ரான் திரிபு பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பயண கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். தென் ஆப்ரிக்கா, போஸ்ட்வானா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கெனவே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவரும், பயணத்திற்கு முன்னர் பெற்ற கோவிட் நெகடிவ் சான்றிதழை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து, பெல்ஜியம், ஹாங்காங், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமைக்ரான் திரிபு பரவியுள்ளது.